பீகாரில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : பாதுகாப்பு வளையத்தில் எம்.எல்.ஏக்கள்
பீகாரில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு : பாதுகாப்பு வளையத்தில் எம்.எல்.ஏக்கள்
ADDED : பிப் 11, 2024 07:35 PM

பாட்னா: பீகார் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.
பீகாரில் மகாகத்பந்தனில் இருந்து வெளியேறிய முதல்வர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இதற்காக தனது பதவியை காலையில் ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாலையில் மீண்டும் முதல்வரானார் நிதிஷ். அதே நேரத்தில் சட்டசபை சபாநாயகர் அவத்பிஹாரி சவுத்ரி ராஜினாமா செய்ய மறுத்தார். மேலும் அவர் சட்டசபை நடவடிக்கைகளை விதிகளின் படி நடத்துவதாக கூறினார். இதனையடுத்து அவர் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனையடுத்து நாளை (12 ம் தேதி) நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா விவாதத்தை தொடர்ந்து சட்டசபை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் இரு அவைகளின் கூட்டு உரையுடன் அமர்வு தொடங்கும். அப்போது, நிதிஷ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்.
முன்னதாக ஹைதராபாத் நகரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த காங்., கட்சி எம்.எல்.ஏக்கள் பாட்னா திரும்பினர். முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு உள்ளனர்.
அதே போல் போத்கயாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்த பா.ஜ, எம்.எல்.ஏக்களும் அங்கிருந்து கிளம்பினர். இது குறித்து பாஜ கூறுகையில் எம்எல்ஏக்கள் சில பயிற்சிக்காக போத்கயா ரிசார்ட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், எதிர்க்கட்சிகளிடமிருந்து வேட்டையாடும் அச்சுறுத்தல் இல்லை என்றும் தெரிவித்தது.
மொத்தம் 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டசபையில் மெஜாரிட்டி நிருபிப்பதற்கு 122 எம்.எல்.ஏக்கள் தேவை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ., 78 , ஐக்கிய ஜனதா தளம்-45, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா-4, சுயேட்சை 1 என மொத்தம் 128 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
எதிர்கட்சி வரிசையி்ல் ஆர்ஜேடி கட்சிக்கு 79 பேரும் , காங்., 19 , சி.பி.ஐ.(எம்.எல்) 12, சி.பி.ஐ.,(எம்) 2 சிபிஐ 2 என மொத்தம் 114 எம்.எல்.ஏக்ககள் உள்ளனர். மேலும் ஓவைசி கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் உள்ளனர்.

