முயற்சி... பயிற்சி... வெற்றி! 'மாற்றும்' திறனாளிகளின் தாரக மந்திரம்
முயற்சி... பயிற்சி... வெற்றி! 'மாற்றும்' திறனாளிகளின் தாரக மந்திரம்
ADDED : டிச 03, 2024 07:48 AM

'உங்களால் பறக்க முடியாவிட்டால்... ஓடுங்கள்... ஓட முடியாவிட்டால்... நடந்து செல்லுங்கள்! தொடர்ந்து நகருங்கள்' என்ற தாரக மந்திரத்தை மாற்றுத் திறனாளிகள் உணர வேண்டும்.
இன்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். இந்த ஆண்டு ஐ.நா., சபை எதிர்காலத்திற்கான தலைமைத்துவம் நோக்கி முன்னேற்ற மாற்றுத் திறனாளர்களை அழைக்கிறது. இந்த ஆண்டின் நோக்கம், வாசகம் இதுவே.
மாற்றுத் திறனாளிகள் இந்த உலகினை மாற்றும் திறனாளர்கள். ஒவ்வொரு துறையிலும் சக மாந்தரை போல தலை நிமிர்ந்தவர்கள். தலைமை ஏற்கும் திறன் பெற்றவர்கள் என்பதை நாளைய உலகம் உணரும்.
பெங்களூரு பீன்யா முதல் ஸ்டேஜில் செயல்படும் மாற்று திறனாளிகளுக்கான தேசிய தொழில் சேவை மையத்திற்கு சென்றோம். தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இயந்திரங்கள் இயங்கும் சத்தத்தை மிஞ்சி, இதயங்கள் இயங்கும் சத்தம் கேட்கிறது.
இந்திய அரசின் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது, மாற்றுத்திறனாளிகள் தேசிய தொழில் சேவை மையம். அமைதியான சூழலில், குறைபாடுகளை மறந்து, மாற்றுத்திறனாளிகள், தொழிற்பயிற்சி பெறுகின்றனர். 15 வயது முதல் 55 வயது வரையிலானோர் இங்கு பயிற்சி பெறுகின்றனர்.
பல வகையான ஊனம், செவித்திறன் குறைபாடு, வாதம், தசைப்பிடிப்பு, பார்வை குறைபாடு உடையோர், மனநோய், கற்றல் குறைபாடு கொண்டோர், காது கேளாதோர், கை, கால் செயலிழந்தோர், இயலாமையுள்ள குணமடைந்த தொழுநோயாளர்கள் என பல பிரிவுகளை சேர்ந்தோர் பயிற்சி பெறுகின்றனர்.
என்னென்ன பயிற்சிகள்
வணிக மற்றும் செயலக நடைமுறை பயிற்சி
கணினி பயன்பாடு.
நுகர்வோர்
மின்னணுவியல்
ஆடை தயாரித்தல்
டி.டி.பி., அச்சிடுதல், புத்தக பைண்டிங்
ஜெனரல் மெக்கானிக்.
ஏர் கண்டிஷன் மெக்கானிக்
காலம் 6 மாதம் முதல் 12 மாதங்கள் வரை
ஆண்டுதோறும் சேர்க்கை
மாதம் 2,500 ரூபாய் உதவித்தொகை.
பயிற்சி முடித்தோருக்கு உரிய வேலை வாய்ப்புக்கும் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு மாநில, மத்திய அரசு வேலை வாய்ப்பு விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. தனியார் துறையினர், என்.ஜி.ஓ., அமைப்பினருடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவர்களுக்கு சுய தொழில் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளும் தொடர்கின்றன. குறையுள்ளவர்களை முழுமையாக்கும் பணி, சோர்வுற்றவர்களை ஊக்கப்படுத்துதல் தொய்வின்றி நடக்கிறது. பல நல்வாய்ப்புகளை மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்து, அவர்களை தலைமை பண்புக்கு உரியவராக்க பயிற்சி அளிக்கப்படுகிறது என்று நிறுவன இணை இயக்குனர் சிவசந்தவீர் திவாகர் தெரிவித்தார்.
அலுவலக முகவரி
பெங்களூரு மாற்றுத் திறனாளிகள் சேவை மையம் எண், 'ஏ 417, பி மெயின், பீன்யா காவல் நிலையம் பின்புறம், 1வது கிராஸ், 1வது ஸ்டேஜ், பெங்களூரு - 560 058 என்ற முகவரியில் இயங்குகிறது. தொலைபேசி: 080- 2839 2907.
Email:dydirvrch.bir-dget@gov.in
vrchbir.ka@gmail.com - நமது நிருபர் -