ADDED : டிச 29, 2024 06:49 AM

தொட்டபல்லாபூர்: கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், காணாமல் போன நபர், அவரது நண்பர்களால் கொல்லப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூரின், பாஷெட்டி ஹள்ளியில் வசித்தவர் தேவராஜ், 65. இவர், இதே பகுதியில், 'நந்தினி பார்லர்' நடத்தி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், இவர் திடீரென காணாமல் போனார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே அக்டோபர் 18ம் தேதி, தொட்டபல்லாபூர் ஊரக போலீஸ் நிலையத்தில், குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
போன் ஆய்வு
போலீசார் தேடியும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன்பின் அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து ஆய்வு செய்த போது, நண்பர்கள் ராஜ்குமார், அனில் மோரே பற்றிய தகவல் கிடைத்தது. காணாமல் போன்ற அன்று, இவர்களுடன் தேவராஜ் பேசியிருந்தது தெரிய வந்தது.
இருவரிடமும் தீவிரமாக விசாரித்த போது, கொலை ரகசியம் அம்பலமானது.
ராஜ்குமாரும், அனில்மோரேயும் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். இருவருமே தேவராஜின் நண்பர்கள். இவரிடம் தொழில் நிமித்தமாக, 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். நண்பர்களுக்கு பணம் கடன் கொடுத்த விஷயத்தை, மனைவியிடமும் தேவராஜ் கூறியுள்ளார்.
பணம் வாங்கி நீண்ட நாட்களாகியும், திருப்பி கொடுக்கவில்லை. இதனால் மூவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. தேவராஜை கொலை செய்தால், பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என, இருவரும் பிளான் போட்டனர். சம்பவம் நடந்த நாளன்று, பணம் தருவதாக நம்ப வைத்து, தேவராஜை காரில் அழைத்து சென்று உள்ளனர்.
புதைப்பு
இதற்காகவே டில்லியில் இருந்து கார் வாங்கி உள்ளனர். காருக்குள்ளேயே அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். உடலை, தொட்டபல்லாபூர் புறநகரின், இன்போசிட்டியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
ஆனால், போலீசாரிடம் சிக்குவோம் என்ற பயத்தில், உடலை வெளியே எடுத்து, அரைகுறையாக எரித்து, மதுரே ஏரியில் வீசி உள்ளனர்.
கொலைக்கு பயன்படுத்திய காரை, கோலாரை சேர்ந்த நபருக்கு விற்றதும், விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தடயவியல் ஆய்வக அதிகாரிகளுடன், இரண்டு நாட்களுக்கு முன், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு சோதனை நடத்திய போது தலைமுடி, செருப்பு உட்பட, சில பொருட்கள் கிடைத்தன. அவைகள் தேவராஜுடையவை என்பதை, அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
மதுரே ஏரியில் நேற்று முன் தினம், சோதனை நடத்திய போது, அரைகுறையாக வெந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவைகள், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. கொலையாளிகள் ராஜ்குமார், அனில் மோரே கைது செய்யப்பட்டு உள்ளனர்.