நியூசி., பெண்ணிடம் வழிப்பறி இருவர் கைது; பாஸ்போர்ட் மீட்பு
நியூசி., பெண்ணிடம் வழிப்பறி இருவர் கைது; பாஸ்போர்ட் மீட்பு
ADDED : ஏப் 09, 2025 11:08 PM
புதுடில்லி:நியூசிலாந்து நாட்டு பெண்ணிடம் பையை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பசிபிக் தீவு நாடான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இந்தியர் சோம்னா சவுத்ரி, கடந்த 2ம் தேதி, வடமேற்கு டில்லி கோஹத் என்க்ளேவ் மார்க்கெட்டுக்கு வந்தார். அங்கிருந்த ஒரு வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது, கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் பைக்கில் வந்த இருவர், சவுத்ரியின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பினர். உடனே, போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ரிதாலா பகுதியில் வசித்த கரண் பாசின்,35, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், அவருடைய கூட்டாளி மோனு என்ற ரகு,19, கைது செய்யப்பட்டார்.
இருவரும் கொடுத்த தகவல்படி, ராஜவுரி கார்டன் கழிவுநீர் கால்வாயில் இருந்து நியூசிலாந்து நாடு பெண்ணின் கைப்பை மீட்கப்பட்டது. அதில், சோம்னா சவுத்ரியின் பாஸ்போர்ட், இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை மற்றும் பிற பொருட்கள் பத்திரமாக இருந்தன. வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் சம்பவத்தின் போது இருவரும் அணிந்திருந்த ஆடைகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டுள்ள கரண் பாசின், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, இதுபோன்ற குற்றங்களைச் செய்து வருகிறார் என்பதும், 2012ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மோனு என்ற ரகு சாலையோர வண்டியில் முட்டை மற்றும் ஆம்லெட் விற்கிறார் இவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர். இருவர் மீதும் ஐந்து வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

