கரோல்பாக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து இரண்டு உடல்கள் மீட்பு
கரோல்பாக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து இரண்டு உடல்கள் மீட்பு
ADDED : ஜூலை 05, 2025 08:32 PM

புதுடில்லி:கரோல்பாக் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மூச்சுத் திணறி வாலிபர் உயிரிழந்தார். தீயை அணைத்த பின், நடத்திய ஆய்வின் போது மற்றொரு ஆண் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார் என உடனடியாக தெரியவில்லை.
புதுடில்லி கரோல்பாக், பதம்சிங் சாலையில், நான்கு மாடி கட்டடத்தில் அமைந்துள்ள 'விஷால் மெகா மார்ட்' வணிக வளாகத்தின், இரண்டாவது மாடியில் நேற்று மாலை, 6:40 மணிக்கு தீப்பற்றியது.
தரை தளம் உட்பட நான்கு தளங்களிலும் இருந்தவர்கள் உடனடியாக அலறியடித்து வெளியேறினர். அப்போது, லிப்டுக்குள் இருந்த வாலிபர் தீரேந்தர் குமார் பிரதாப் சிங், 25, தன் அண்ணனுக்கு மொபைல் போனில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பினார்.
கடைசியாக அனுப்பிய செய்தியில், 'எனக்கு மூச்சுத் திணறுகிறது; எப்படியாவது காப்பாற்றுங்கள்' என கூறியிருந்தார்.
தகவல் அறிந்து, 13 வண்டிகளில், 90 தீயணைப்புப் படையினர் வந்தனர். கடுமையாகப் போராடி நள்ளிரவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், லிப்டுக்குள் சிக்கியிருந்த தீரேந்தர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
தீயை அணைத்த பின், கட்டடத்துக்குள் நடத்திய ஆய்வின் போது, மற்றொரு ஆண் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. அவர் ஊழியரா? வாடிக்கையாளரா? என்பது உடனடியாக தெரியவில்லை. இரு உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மூன்று தளங்களிலும் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மின் கசிவு காரணமாக் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து, கரோல்பாக் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீயணைப்பு அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
தீயணைப்புத் துறை துணை தலைமை அதிகாரி எம்.கே.சட்டோபாத்யாயா கூறியதாவது:
கரோல்பாக் விஷால் மாலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, மாலை 6:50 மணிக்கு தகவல் கிடைத்தது. அடுத்த, 15 நிமிடங்களில் அங்கு சென்றோம். முழு கட்டடமும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அடித்தளம், தரை தளம் மற்றும் மூன்று தளங்கள் இருந்த அந்தக் கட்டடத்தில், சில தற்காலிக அமைப்புகளும் இருந்தன. படிக்கட்டுகள் மற்றும் அவசர கால வழிகளில் பொருட்கள் நிரப்பி வைத்திருந்தனர்.
அதனால், கட்டடத்துக்குள் செல்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது.
பிரதான வாயில் முற்றிலும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. மூன்றாவது தளத்தில், எண்ணெய் மற்றும் நெய் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததால், அங்கு தீ கொழுந்து விட்டு எரிந்து புகை மண்டலம் சூழ்ந்திருந்தது.
அடித்தளம், தரை தளம், முதல் தளம் மற்றும் இரண்டாவது தளம் உட்பட கட்டடத்தின் மீதமுள்ள பகுதிகளில் மிக விரைவாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தோம்.
லிப்ட் பாதியிலேயே நின்றதால் அதற்குள் சிக்கியிருந்த தீரேந்தர் என்ற வாலிபரை மீட்பதற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

