ADDED : செப் 22, 2024 01:01 AM

மைசூரு: மைசூரு அரண்மனை வளாகத்தில் முகாமிட்டுள்ள இரு தசரா யானைகள், ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
கர்நாடக மாநிலம் மைசூரு தசராவில் பங்கேற்க பல்வேறு முகாம்களில் இருந்து 14 யானைகள் வந்துள்ளன. அரண்மனை வளாகத்தில் முகாமிட்டு உள்ளன.
உணவு வேளையின்போது, கஞ்சன், 25, மற்றும் தனஞ்செயா, 43, யானைகளுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது யானைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கவில்லை.
திடீரென, கஞ்சன் யானையை, தனஞ்செயா யானை விரட்டியது.
அந்த யானையின் மீது அமர்ந்திருந்த பாகன், அதை கட்டுப்படுத்த முயற்சித்தார். ஆனால், தனஞ்செயா யானை அடங்கவில்லை.
கஞ்சன் யானை, அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டு, ஜெயமார்த்தாண்ட வர்மா நுழைவாயில் வழியாக, சாலையை நோக்கி ஓடியது.
பதற்றமடைந்த பாகன், அதன் பின்னால் ஓடினார். திடீரென யானை, அரண்மனையில் இருந்து வெளியே வருவதைப் பார்த்த பொதுமக்கள், அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர். இரு யானைகளின் பாகன்களும், அவற்றை பின்தொடர்ந்து சென்று சமாதானப்படுத்தினர்.
யானைகளை கண்காணித்து வரும் வனத்துறை அதிகாரி பிரபு கவுடா கூறியதாவது:
இரு யானைகளும், துபாரே யானைகள் முகாமில் இருந்து வந்துள்ளன. இதுபோன்று சண்டையிடுவது முதல் முறையல்ல. இரண்டும் ஆண்யானைகள் என்பதால், அவ்வப்போது தங்களின் வீரத்தை வெளிக்காட்டிக்கொள்ள முற்படுகின்றன.
தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியே ஓடிய கஞ்சன், பொதுமக்களின் கூட்டத்தையும், தன் பாகனையும் பார்த்ததும் அமைதியானது. கடவுள் அருளால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சண்டை போட்ட யானைகள்.