ADDED : ஜூலை 10, 2025 06:30 AM
திருவனந்தபுரம் : கேரளாவில் ஹோட்டல் உரிமையாளரை கொன்று, உடலை பாயில் சுருட்டி வைத்த இரண்டு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஜஸ்டின் ராஜ், 60. இவரது ஹோட்டலில் எட்டு ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை ஹோட்டலை திறந்த போது, ஆறு ஊழியர்கள் மட்டுமே வந்திருந்தனர்; இரண்டு பேர் வரவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால் அவர்களை தேடி, அந்த வீட்டுக்கு ஜஸ்டின் ராஜ் சென்றார். பின்னர் அவரும் ஹோட்டலுக்கு திரும்பவில்லை.
இதையடுத்து, பணியில் இருந்த ஊழியர்கள், அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ஜஸ்டின் ராஜ் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாயால் மூடி, சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் தங்கியிருந்த இரண்டு ஊழியர்களையும், ஜஸ்டின் ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தலைமறைவாக இருந்த ராஜேஷ், நேபாள நாட்டைச் சேர்ந்த டேவிட் ஆகியோரை நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின், போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 'ஹோட்டல் உரிமையாளர், எங்களை வேலைக்கு வரும்படி கடுமையான வார்த்தைகளால் திட்டியதால், ஆத்திரமடைந்து அவரை கொலை செய்தோம்' என தெரிவித்தனர்.