சிக்னலில் நின்றிருந்த 3 பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
சிக்னலில் நின்றிருந்த 3 பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் பலி
ADDED : நவ 03, 2025 02:36 AM

பெங்களூரு: பெங்களூரில் சிக்னலுக்காக நின்றிருந்த மூன்று பைக்குகள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில், இருவர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள ரிச்மென்ட் சர்க்கிளில் இருந்து சாந்தி நகர் நோக்கி நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்றது.
அங்குள்ள சங்கீதா சிக்னலில் சிவப்பு சிக்னல் போடப்பட்டிருந்ததால், வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், மூன்று பைக்குகள் மீது மோதியது. அதில் ஒரு பைக்கை, 150 அடி துாரத்துக்கு இழுத்து சென்ற ஆம்புலன்ஸ், அங்கிருந்த போலீஸ் பூத் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற இஸ்மாயில், 40, அவரது மனைவி சமீன் பானு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் இருவரை போலீசார் மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிர் காக்கும் வாகனமாக கருதப்படும் ஆம்புலன்ஸ் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் ஆம்புலன்சை உடைத்து தலை குப்புற கவிழ்த்தனர். மோதலுக்கு காரணமான ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் தப்பியோடினார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.

