ADDED : ஜன 21, 2026 06:19 AM
குவஹாத்தி, ஜன. 21-
அசாமின் கோக்ராஜ்ஹர் மாவட்டத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின், கோக்ராஜ்ஹர் மாவட்டம் கரிகான் பகுதியில் நேற்று முன்தினம், போடோ இனத்தை சேர்ந்த மூவர் வாகனத்தில் சென்றனர். அவர்களது வாகனம் அவ்வழியே சென்ற பழங்குடியினத்தை சேர்ந்த இருவர் மீது மோதியது. இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இது பற்றி அறிந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் வாகனத்தில் வந்து மோதிய நபர்களை தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்துக்கும் தீ வைத்தனர். இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார்.
இதையடுத்து, காரிகான் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று குவிந்த போடோ இன மக்கள் மற்றும் பழங்குடியினர் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், வாகன போக்குவரத்து தடைபட்டது.
அப்போது சாலைகளில் டயர்களை கொளுத்தியும், சில வீடுகளை சூறையாடியும் போராட்டக்குழுவினர் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அரசு அலுவலகத்துக்கும் தீ வைத்த கும்பல், காரிகான் போலீஸ் புறக்காவல் நிலையத்தையும் அடித்து நொறுக்கியது.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதை தடுக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
இதற்கிடையே, போடோ மற்றும் பழங்குடியினர் இடையே நடந்த மோதலில் பிஸ்மித் என்பவர் அடித்து கொல்லப்பட்டார். இதையடுத்து, மோதலில் காயமடைந்த முர்மு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வன்முறை கும்பல், பிர்சா கமாண்டோ படையின் இரண்டு தற்காலிக முகாம்களை தீ வைத்துக் கொளுத்தினர். சிது கன்ஹு பவன் உட்பட அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
பல கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதால், மேலும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

