ADDED : ஜன 22, 2026 12:10 AM
ராய்ச்சூர்: கர்நாடகாவில், இரண்டு மினி லாரிகள் நேருக்கு நேர் மோதியதில், ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுார் தாலுகாவில் உள்ள சிரகுப்பா - சிந்தனுார் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அதிவேகமாக சென்ற 'டாடா ஏஸ்' வாகனமும், எதிரே வந்த 'மஹிந்திரா ஜீடோ' வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், அந்த இரு மினி லாரிகளில் பயணித்தவர்களில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தை சேர்ந்த மஹிந்திரா ஜீடோ டிரைவரான யரகூலா மல்லய்யா, 39; மந்த்ராலயா அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மஹாநந்தி, 28; மற்றும் கிரி வீரேஷ், 26; சன்ன யல்லய்யா, 40, அவரது மகன் ரங்கநாத், 15, ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மஹிந்திரா ஜீடோ வாகனத்தில் இருந்தவர்கள், பாகல்கோட்டின் கெரூருக்கு ஆடுகளை விற்க சென்றவர்கள். வியாபாரம் முடிந்து ஊருக்கு திரும்பும் போது விபத்து நடந்துள்ளது. டாடா ஏஸ் வாகன ஓட்டுநரின் அலட்சியமே, விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சை பெறுகின்றனர். விபத்தை ஏற்படுத்திய டாடா ஏஸ் வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

