ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட மேலும் 2 பேர் கைது
UPDATED : மே 13, 2025 02:59 PM
ADDED : மே 12, 2025 02:14 PM

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பகிர்ந்து வந்த பெண் உள்பட 2 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் இந்திய ராணுவம் பற்றிய தகவல்கள், புகைப்படங்களை பாகிஸ்தான உளவுத்துறைக்கு கொடுத்து வந்ததாக பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கசிய விட்டதாக மேலும் இரண்டு பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது; உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை பகிர்ந்து வந்த மலேர்கோட்லாவைச் சேர்ந்த குஷாலா மற்றும் யாமீன் முகமது ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம்புரிந்த அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர்களும் எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளது.
ராணுவம் தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு கொடுத்து விட்டு, அதற்காக இவர்கள் ஆன்லைனில் பணத்தை பெற்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.