ADDED : பிப் 02, 2025 12:57 AM

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, தேக்கடி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய வகை ஏலக்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய்களை வகைப்படுத்தும் வகையில், இந்தியா, இலங்கை, டென்மார்க், சிங்கப்பூர், செக் குடியரசு, இங்கிலாந்து, கொலம்பியா நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
அதில், கேரள மாநிலம், கோழிக்கோடு பல்கலை தாவரவியல் துறை முன்னாள் தலைவர் மாமியில்சாபு, சிங்கப்பூர் தேசிய பல்கலையை சேர்ந்த ஜானாலியோங் ஸ்டோர்னிக்கோவா ஆகியோர் மூணாறு, தேக்கடி பகுதிகளில் இரண்டு புதிய வகை ஏலக்காய்களை கண்டுபிடித்தனர்.
மூணாறில், 'எலிட்டேரியா டூலிப்பிபெரா' வகை, தேக்கடியில், 'எலிட்டேரியா பேஷிபெரா' வகை ஏலக்காய் கண்டறியப்பட்டன.
அவை, இலங்கை மற்றும் கேரளாவில் தென் பகுதிகளில் காணப்படும் பச்சை ஏலக்காய் வகையை சேர்ந்ததாகும். எலிட்டேரியா டூலிப்பிபெரா வகை துலிப்பூக்கள் வடிவில் காணப்படும்.
தேக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட, 'எலிட்டேரியா பேஷிபெரா' வகை குறித்து, ஏற்கனவே பழங்குடியினர் இனத்தில் மன்னான் சமுதாய மக்களுக்கு நன்கு தெரியும்.
அதன் காய்கள் பிளவுபட்ட நிலையில் காணப்படும் என்பதால், 'வாய் நோக்கி ஏலம்' என, அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.