மேற்கு வங்கத்தில் செவிலியர் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி
மேற்கு வங்கத்தில் செவிலியர் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி
ADDED : ஜன 12, 2026 10:30 PM

கோல்கட்டா: நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு செவிலியர்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவசரக் கால நடவடிக்கைக் குழுவை அங்கு அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டம், பாராசாத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் செவிலியருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான கட்வாவுக்குச் சென்று திரும்பியுள்ளார். வங்கதேச எல்லைக்கு அருகில் உள்ள நாடியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் அவர்கள் சென்று வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து தற்போது இருவரும் கல்யாணி எய்ம்ஸ் மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புனே தேசிய நச்சுயிரியல் நிறுவனம் , சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மேற்கு வங்கத்திற்கு விரைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஆலோசித்து, தேவையான அனைத்து மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

