போலீஸ் மகனின் கார் ரேஸால் பாதசாரிகள் இருவர் உயிரிழப்பு
போலீஸ் மகனின் கார் ரேஸால் பாதசாரிகள் இருவர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 20, 2025 03:34 AM

ஆமதாபாத் : குஜராத்தில், கார் ரேஸில் ஈடுபட்டு சாலையில் நடந்து சென்ற இரண்டு பேர் உயிரிழக்க காரணமாக இருந்த போலீஸ் அதிகாரி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் பாவ்நகரில் உள்ள கலியாபீட் என்ற பகுதியை சேர்ந்த ஹர்ஷ்ராஜ் சிங் கோஹில், 20, தன் நண்பருடன் கார் ரேஸில் ஈடுபட்டார்.
'ஹூண்டாய் கிரெட்டா' காரை ஹர்ஷ்ராஜ் சிங் ஓட்டிச் செல்ல, அவரது நண்பர், 'மாருதி பிரெஸ்ஸா' காரை ஓட்டி வந்துள்ளார்.
நெரிசலான சாலையில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாகச் சென்றபோது, ஹர்ஷ்ராஜ் சிங்கின் கார் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாகச் சென்ற பார்கவ் பட், 30, மற்றும் சாம்பாபென் வச்சானி, 65, ஆகியோர் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின், சாலையில் சறுக்கிச் சென்று, இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. அதில் பயணித்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த பார்கவ் பட்டிற்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ஹர்ஷ்ராஜின் தந்தை அனிருத்தா சிங் வஜுபா கோஹில், போலீஸ் குற்றப்பிரிவு எஸ்.ஐ.,யாக உள்ளார். இந்த சம்பவத்தை அறிந்து அங்கு வந்த அவர், மகனை அடித்து இழுத்துச் சென்று நீலாம்பாக் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.