ADDED : மார் 08, 2026 12:58 AM

பரிதாபாத்: ஹரியானாவில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மற்றும் அவரது சகோதரர் காருக்குள் இறந்து கிடந்தனர்.
பீஹார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குந்தன் குமார்,44. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது சகோதரர் ரஞ்சன் குமார்,38. மாற்றுத்திறனாளி.
இருவரும் ஹரியானா மாநிலம் பரிதாபாத் ரோஷன் நகரில், 10 ஆண்டுகளாக வசித்தனர். நேற்று முன் தினம் காலை சகோதரர்கள் இருவரும் காரில் சென்றனர். மாலை வரை வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் குடும்பத்தினர் விசாரித்தனர். ஆனால், எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து, போலீசில் புகார் செய்தனர்.
இந்நிலையில், பரிதாபாத் நவீன் நகர் அக்வான்பூர் சாலை ஓரத்தில் நேற்று முன் தினம் காலை 10:00 மணியில் இருந்து ஒரு கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசுக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்றனர். கார் கதவை உடைத்து திறந்தனர். காருக்குள் குந்தன் குமார் மற்றும் ரஞ்சன் குமார் ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர். உடல்களை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

