ADDED : ஜன 13, 2026 12:45 AM

புதுடில்லி: மேற்கு வங்கத்தின் கல்யாணி நகரில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் கல்யாணி நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் நோயறிதல் ஆய்வகம் உள்ளது.
இங்கு வந்த இரு மாதிரிகள் கடந்த 11ல் மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், இருவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் இந்திய, வங்கதேச எல்லையை ஒட்டிய மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தின் குக்ராகசி பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்தது உறுதியாகியுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பன்றி போன்ற விலங்குகள் மூலம் பரவும் இந்த வைரஸ், அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதுடன் விரைவாக பரவும் தன்மை கொண்டது. நிபா வைரஸ் பரவல் பற்றி அறிந்த மத்திய சுகாதாரத்துறை செயலர், மேற்கு வங்க தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநிலத்தில் நிபா வைரஸ் நிலமையை மதிப்பாய்வு செய்து விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். இதற்காக தேசிய ஒருங்கிணைந்த மீட்புக்குழு மாநில அரசுக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த குழுவில் கொல்கட்டாவின் தேசிய சுகாதாரம் மற்றும் பொது சுகாதார நிறுவனம்; புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம்; சென்னையின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ; கல்யாணியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவற்றின் நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதற்கிடையே ''நிபா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன்'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

