ADDED : ஜன 24, 2025 06:59 AM
சிக்கபல்லாபூர்: சிறுமியர் பலாத்கார வழக்கில், இரண்டு நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சிக்கபல்லாபூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிக்கபல்லாபூர், சிந்தாமணியின், ஐமிரெட்டி கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவரது வீட்டருகில் வசிப்பவர் கல்யாண், 25. கடந்த 2017ல் பள்ளிக்கு சென்றிருந்த சிறுமிக்கு, உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பள்ளியில் இருந்து சிறுமியின் தந்தைக்கு போன் செய்து, தகவல் கொடுத்தனர். மகளை அழைத்து செல்லும்படி கூறினர்.
சிறுமியின் தந்தைக்கு வேலை இருந்ததால், வீட்டருகில் வசிக்கும் கல்யாணிடம் தன் பைக்கை கொடுத்து, மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்படி கூறி அனுப்பினார். பள்ளிக்கு சென்ற கல்யாண், சிறுமியை பைக்கில் அமர்த்தி கொண்டு, வீட்டுக்கு செல்வதற்கு பதில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது பற்றி சிறுமி, தன் தந்தையிடம் கூறினார். அவர் சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து, கல்யாணை கைது செய்தனர். விசாரணையை முடித்து, சிக்கபல்லாபூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.
சிக்கபல்லாபூர், சிந்தாமணியின், சிக்கமுனிமங்களா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 25. இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக நம்ப வைத்து, 2021ல் பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கினார். இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பாக, சிந்தாமணி ஊரக போலீஸ் நிலையத்தில், சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்து, சிக்கபல்லாபூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
விசாரணையில் கல்யாண், சுரேஷின் குற்றம் உறுதியானது. இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சவிதா குமாரி நேற்று தீர்ப்பளித்தார்.

