ADDED : டிச 31, 2024 05:27 AM
துமகூரு: போலியான ஏ.டி.எம்., கார்டு பயன்படுத்தி, மக்களின் பணத்தை கொள்ளையடித்த இரண்டு வெளிநாட்டு பிரஜைகளுக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துமகூரு நகரில், பல்வேறு ஏ.டி.எம்., இயந்திரத்தில், மர்ம நபர்கள், 'ஸ்கிம்மிங்' மெஷினுடன் கேமரா பொருத்தினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வரும் போது, ஏ.டி.எம்., கார்டு பின்கோடு கேமராவில் பதிவாகும். இந்த தகவல்களை வைத்து, போலியான கார்டுகள் தயாரித்து, ஏ.டி.எம்.,மில் பணத்தை எடுத்து வந்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. 2022 ஆகஸ்ட் 31ல் நடந்த திருட்டு தொடர்பாக, துமகூரின் சைபர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், நைஜீரியாவின் லாரன்ஸ் மொகாமோ, 35, கென்யாவின் இவான் கம்போஜி, 35, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, துமகூரின் 2வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 5.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.