ADDED : ஜூலை 30, 2025 11:59 PM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற நம் ராணுவம், ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.
ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கிடமாக இருவர் நடமாட்டம் இருப்பதை ராணுவத்தினர் கண்டறிந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்தபோது, வீரர்களை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு நம் வீரர்கள் சுட்டதில், இருவரும் கொல்லப்பட்டனர். 'ஆப்பரேஷன் சிவசக்தி' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜம்முவைச் சேர்ந்த நம் ராணுவத்தின் 'ஒயிட் நைட் கார்ப்ஸ்' வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் வாயிலாக, ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது; மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என குறிப்பிடப்பட்டுள்ளது.