ADDED : ஆக 13, 2025 01:33 AM

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெட்டுக்காடு சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த இளம்பெண்ணிடம் நகை பறித்த தூத்துக்குடியைச் சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வெட்டுக்காடு சர்ச்சில் ஆக., 8 பிரார்த்தனைக்காக வந்த இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த மூன்றேகால் பவுன் தங்கச்செயின் திருட்டு போனது. இதுகுறித்து அவர் வலியத்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இரு பெண்கள் ஆட்டோவில் அவசரம் அவசரமாக ஏறி செல்வது தெரிந்தது. அந்த ஆட்டோவை போலீசார் கண்டுபிடித்து அதன் டிரைவரிடம் விசாரித்த போது கழக்கூட்டம் ரயில் நிலையம் அருகே அவர்களை இறக்கி விட்டதாக தெரிவித்தார்.
அங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற இரண்டு பெண்களிடம் விசாரணை நடத்தியதில் தூத்துக்குடி மாவட்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கொடக்காத்தி 48, அவரது தங்கை பழனியம்மா 45, என தெரிய வந்தது. அவர்கள் செயின் திருடியதை ஒப்பு கொண்டனர். செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.