ADDED : டிச 03, 2024 01:08 AM

ஸ்ரீநகர், 'ஊபர் இந்தியா' நிறுவனத்தின் முதல் நீர் போக்கு வரத்து சேவை, ஜம்மு - காஷ்மீரின் தால் ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, 'ஊபர்' நிறுவனம், மக்கள் பயன்பாட்டுக்கான வாகனப் போக்குவரத்து, உணவு டெலிவரி சேவைகளை பல்வேறு நாடுகளிலும் அளித்து வருகிறது.
முதல்முறை
நம் நாட்டில், 'ஊபர் இந்தியா' என்ற பெயரில் பொது போக்குவரத்து சேவைகளை அளித்து வருகிறது. இதை தொடர்ந்து, ஆசியாவில் முதல்முறையாக, நீர் போக்குவரத்து சேவையில், 'ஊபர் இந்தியா' நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீரின் தால் ஏரியில் பிரசித்தி பெற்ற, 'ஷிகாரா' எனப்படும், படகு சவாரி சேவையை, 'ஊபர் இந்தியா' நிறுவனம் துவங்கியுள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள படகு சவாரி சேவைகளை பல்வேறு தனிநபர்கள் அளித்து வருகின்றனர். அவர்களோடு இணைந்து, 'ஊபர் இந்தியா' நிறுவனமும் இந்த சேவையை துவங்கியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் கூறியதாவது:
காஷ்மீரில், சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கும் முக்கிய அம்சமான தால் ஏரியில், படகு சவாரியை துவங்குவதில் பெருமை அடைகிறோம்.
தால் ஏரியின், ஷிகாரா காட் எண் 16ல் எங்கள் சேவையை சுற்றுலா பயணியர் பெறலாம். முதல்கட்டமாக ஏழு படகுகள் எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இது அதிகரிக்கப்படும்.
தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை படகு சவாரி சேவை இயங்கும். 12 மணி நேரத்தில் இருந்து 15 நாட்கள் வரை முன்கூட்டியே படகு சவாரியை, 'ஊபர்' செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். படகு இயக்குபவர்களிடம் இருந்து எங்கள் நிறுவனம் கட்டணம் வசூலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொழில் மேம்படும்
''தால் ஏரியில் தற்போது 4,000 படகுகள் இயக்கப்படுகின்றன. ஊபர் செயலி வாயிலாக முன்பதிவு செய்வது சுற்றுலா பயணியருக்கு வசதியை அதிகரிப்பதுடன், படகு சவாரி தொழிலும் மேம்படும்,'' என, ஷிகாரா சங்க தலைவர் வாலி முகமது பட் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான இத்தாலியின் வெனிஸ் நகரில், படகு சவாரி சேவையில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள, 'ஊபர்' நிறுவனம், ஆசியாவில் முதல்முறையாக தால் ஏரியில் இந்த சேவையை துவங்கியுள்ளது.