பெண் வேட்பாளரை ஆபாசமாக விமர்சித்த உத்தவ் சிவசேனா எம்.பி. மீது வழக்கு
பெண் வேட்பாளரை ஆபாசமாக விமர்சித்த உத்தவ் சிவசேனா எம்.பி. மீது வழக்கு
ADDED : நவ 01, 2024 09:50 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் ஏக்நாத்ஷிண்டே சிவசேனா கட்சியின் ஷைனா என்.சி., என்ற பெண் வேட்பாளரை ‛இறக்குமதி ஐயிட்டம் ' என உத்தவ் சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்த் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
288 தொகுதிகள் கொண்டமஹாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் உத்தவ் சிவசேனா, காங்.,, தேசியவாத காங்., (சரத்பவார் ) கூட்டணி மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி எனவும், பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே சிவசேனா , (அஜித்பவார் )தேசியவாத காங்., மகாயூதி என்ற கூட்டணி என இரு முனைப்போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் மும்பாதேவி தொகுதியில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா பெண் வேட்பாளராக ஷைனா என்.சி. போட்டியிடுகிறார். இவர் முன்னர் பா.ஜ.,விலிருந்து விலகி ஏக்நாத்ஷிண்டே சிவசேனா கட்சியில் ஐக்கியமானார்.
நேற்று இத்தொகுதியில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி., அரவிந்த் சாவந்த், பேசுகையில், இத்தொகுதியில் போட்டியிடும் ஷைனா என்.சி. பா.ஜ.,வில் இருந்த போது அவருக்கு சீட் கிடைக்கவில்லை என்பதால் அங்கிருந்து விலகி ஏக்நாத்ஷிண்டே சிவசேனாவில் இணைந்தார். இது போன்ற ‛இறக்குமதி ஐயிட்டம் ' ஏக்நாத் ஷிண்டே கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் கட்சி வேட்பாளராகிவிட்டார் என ஆபாசமாக விமர்சித்தார்.
இவரது ஆபாச விமர்சனம் சர்ச்சை ஏற்படுத்தியது. இது குறித்து நக்பாடா போலீஸ் நிலையத்தில் ஷைனா என்.சி., புகார் அளித்தார். போலீசார் எம்.பி. அரவிந்த் சாவந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.