மூடப்படாத சாலை பள்ளங்கள் மோகன்தாஸ் கடும் அதிருப்தி
மூடப்படாத சாலை பள்ளங்கள் மோகன்தாஸ் கடும் அதிருப்தி
ADDED : செப் 21, 2024 06:46 AM
பெங்களூரு: ''துணை முதல்வர் சிவகுமார் விதித்திருந்த காலக்கெடு முடிந்தும், சாலை பள்ளங்கள் மூடும் பணி முடியவில்லை,'' என, இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன் தாஸ் பை அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், பெங்களூரின் சாலைப் பள்ளங்கள் குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார். 'பெங்களூரின் சாலைப் பள்ளங்கள், 15 நாட்களில் மூடப்படும் என, காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தது.
ஆனால் தன் பாக்கெட்டை நிரப்புவதில் ஆர்வம் காட்டுகிறது' என, அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதை ஆமோதித்து, இன்போசிஸ் நிறுவனத்தின், முன்னாள் தலைமை நிதி அதிகாரி மோகன்தாஸ் பை, 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
துணை முதல்வர் சிவகுமார், 15 நாட்களில் பெங்களூரில் சாலைப் பள்ளங்கள் மூடப்படும் என, வாக்குறுதி அளித்த பின், விடுமுறையில் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.
நாம், சீர்குலைந்த சாலைகளில் நடமாடுகிறோம். பள்ளங்களை மூடுவதாக அவர் அளித்த வாக்குறுதி என்ன ஆனது? இவரது பேச்சை மக்கள் இனி நம்புவரா?
பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சராக, சிவகுமார் தோல்வி அடைந்துள்ளார். பொதுமக்கள் அவரை நம்புகின்றனர். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவார் என, நம்புகிறேன். துணை முதல்வர் சிவகுமார் அளித்திருந்த காலக்கெடு முடிந்தும், சாலைப் பள்ளங்கள் மூடப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.