இளங்கலை மாணவர் சேர்க்கை டில்லி பல்கலையில் துவக்கம்
இளங்கலை மாணவர் சேர்க்கை டில்லி பல்கலையில் துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 08:20 PM
புதுடில்லி:டில்லி பல்கலையில், 2025 - 20-26ம் கல்வியாண்டில் இளங்கலை மாணவர் சேர்க்கை துவங்கியது.
டில்லி பல்கலை கல்வித்துறை தலைவர் ஹனீத் காந்தி, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு சி.எஸ்.ஏ.எஸ்., என்ற இணையதளம் நேற்று திறக்கப்பட்டுள்ளது. பல்கலையின், 69 கல்லூரிகளில் 79 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மொத்தம் 71,624 மாணவ - மாணவியர் சேர்க்கப்படுவர். தொழில் சார்ந்த கல்வியை விரிவுபடுத்த, புதுமையான திறன் சார்ந்த படிப்புகளுக்கான சேர்க்கையும் துவக்கப்பட்டுள்ளது.
ஏ.சி., இயந்திரம் பழுது நீக்குதல், அனிமேஷன் மற்றும் மோஷன் கிராபிக்ஸ், பேக்கரி மற்றும் மிட்டாய் ஆகிய திறன் சார்ந்த இளங்கலை படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அனைத்து இளங்கலை படிப்புகளுக்கும், 'கியூட்' எனப்படும் பொது பல்கலை நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். மேலும், இந்த ஆண்டு சுற்றுலா மேலாண்மையில் முதுகலை - 50 இடங்கள், மற்றும் ஹிந்தி இதழியல் முதுகலை படிப்பு புதிதாக துவக்கப்பட்டுள்ளன.
இளங்கலை சேர்க்கை செயல்முறை இரண்டு கட்டங்களாக நடக்கும். நேற்று முதல் விண்ணப்பிக்கும் மாணவ - மாணவியர் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், பிளஸ்2 மதிப்பெண், மற்றும் கியூட் விண்ணப்ப எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
கியூட் தேர்வு முடிவு வெளியான பின், இரண்டாம் கட்ட பதிவு துவங்கும். அப்போது, மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடம் மற்றும் கல்லூரி குறித்து பதிவு செய்யல்லாம்.
சேர்க்கை இறுதி நாள் முடிந்து, பரிசீலனைக்குப் பின், தரவரிசை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.