தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு கேரளாவில் ஒரே மாதிரியான 'ஷிப்டு'
தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு கேரளாவில் ஒரே மாதிரியான 'ஷிப்டு'
ADDED : அக் 22, 2025 06:17 AM

திருவனந்தபுரம்: தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான, 'ஷிப்டு' முறையை செயல்படுத்த, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் மார்க்., கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 100 படுக்கை வசதி களுக்கு மேலுள்ள தனியார் மருத்துவமனைகளில், மூன்று ஷிப்டு முறைக்கு அனுமதி அளித்து, சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இதில் திருத்தம் செய்து புதிய உத்தரவை மாநில அரசு நே ற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, படுக்கை வசதிகள் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல், அனைத்து தனியார் மருத்துவமனைகளில், நர்சுகள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும், ஒரே மாதிரியான ஷிப்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, ஊழியர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் அல்லது ஒரு மாதத்திற்கு 208 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், அவர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் பெற உரிமை உண்டு.
மேலும், வீட்டுக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாத ஊழியர்களுக்காக, மருத்துவமனையில் ஓய்வு அறைகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.