மக்களின் ஆசியை பெற்ற பா.ஜ., அரசு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
மக்களின் ஆசியை பெற்ற பா.ஜ., அரசு: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ADDED : பிப் 01, 2024 05:06 PM

புதுடில்லி: நாட்டின் வளர்ச்சிக்காக பா.ஜ., அரசு செய்த பணிகளுக்காக மக்களின் நம்பிக்கை மற்றும் ஆசியை பெற்றுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து டில்லியில் நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சரியான நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் திசையில் பொருளாதாரத்தை கையாண்டுள்ளோம். அக்கறையுடன் கூடிய அரசாக உள்ளது. நிதி பற்றாக்குறையானது 5.9 சதவீதத்தில் இருந்து 5.8 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2024- 25 பட்ஜெட்டில் இதனை 5.1 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நடுத்தர மக்களுக்காக குடியிருப்பு திட்டம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த வளர்ச்சி திட்டங்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. சரியான கொள்கை, நோக்கம், கொள்கை முடிவுகளுடன் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பாக நிர்வகித்துள்ளோம். அக்கறை, நம்பிக்கை உறுதி உள்ள நிர்வாகமாக பா.ஜ., அரசு செயல்படுகிறது. மக்கள் நன்றாக சம்பாதிக்கவும், உயர்ந்த நோக்குடன் எதிர்காலத்தை கட்டமைக்கவும் அரசு உதவுகிறது.
முந்தைய அரசின் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். ஜிடிபியில் செய்த சிறந்த சாதனைகளுக்காக, மக்களின் நம்பிக்கை மற்றும் ஆசியை மத்திய அரசு பெற்றுள்ளது. எங்களைப் பொறுத்தவரை ஜிடிபி என்றால் நிர்வாகம், வளர்ச்சி மற்றும் திறமை. இவ்வாறு அவர் கூறினார்.