காங்., ஆட்சியில் பணவீக்கம் 'டபுள் டிஜிட்' அமித் ஷா குற்றச்சாட்டு
காங்., ஆட்சியில் பணவீக்கம் 'டபுள் டிஜிட்' அமித் ஷா குற்றச்சாட்டு
ADDED : மார் 07, 2024 02:42 AM

மும்பை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அதை 5 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் நேற்று இந்திய சர்வதேச கூட்டமைப்பின் வருடாந்திர முதலீட்டு உச்சி மாநாடு நடைபெற்றது.
பொருளாதார வளர்ச்சி
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன், நம் நாட்டின் பொருளாதாரம் பலவீனமாக இருந்ததுடன், பணவீக்கமும் அதிகரித்து காணப்பட்டது.
நிதிப் பற்றாக்குறையும் நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு இருந்தது. ஆனால், இன்றைய நிலையில் அரசின் கொள்கையுடன் நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. எங்கள் 10 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் மற்றும் அடுத்த 25 ஆண்டுகால செயல்திட்டத்துடன் இந்த லோக்சபா தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள உள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்கு பார்வை உடையவர்; சுதந்திர தினத்தின் நுாற்றாண்டு விழா 2047ல் கொண்டாடும்போது, நம் நாடு வளர்ந்த நாடாக உருவெடுத்திருப்பதுடன், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக திகழும்.
மக்களின் நம்பிக்கை
கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.
அப்போது, பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது, 5 சதவீதத்திற்கும் குறைவாக கட்டுப்படுத்தி உள்ளோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் வரை பல்வேறு திட்டங்களில் ஊழல் புரையோடி கிடந்தன; இது, நம் நாட்டு மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்தது.
எனினும், நம் நாடு தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவு கொண்ட நாடாக விளங்குகிறது. ஆனால் ஐக்கிய முற்போக்கு ஆட்சியின்போது செயலற்ற நிலையில் இருந்த அரசை ஆற்றல்மிக்கதாக மாற்றிஉள்ளோம்.
பிற்போக்கான வளர்ச்சியில் இருந்து முற்போக்கான நிலைக்கும் நம் நாட்டை உயர்த்தி உள்ளோம்; பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து உயர் பொருளாதாரமாகவும் நம் நாடு தகவமைத்து கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

