அவசரத்தில் மனைவியை மறந்த மத்திய அமைச்சர்: கான்வாயுடன் 'யு டர்ன்' அடித்து ஓட்டம்
அவசரத்தில் மனைவியை மறந்த மத்திய அமைச்சர்: கான்வாயுடன் 'யு டர்ன்' அடித்து ஓட்டம்
ADDED : ஜூலை 20, 2025 11:48 PM

ஜூனாகத்: சாதாரணமாக மனைவியை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, ஏதோ நினைவில் கணவர் வேறு இடத்திற்கு புறப்பட்டு விட்டாலே போதும்; அந்த குடும்பத்தில் அடுத்து என்ன நிகழும் என்பதை யூகித்து விடலாம்.
இப்படியொரு அனுபவம், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டுள்ளது.
தன் துறை ரீதியான பணிக்காகவும், புனிதத் தலங்களுக்கு செல்லவும் மனைவி சாதனாவுடன் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் சென்றிருந்தார்.
தேசிய கிர் பூங்காவுக்கு மனைவியை அழைத்துச் சென்று சிங்கங்களை கண்டுகளித்த அவர், சோம்நாத் ஜோதிர்லிங்க தலத்தையும் தரிசித்தார்.
பின், ஜூனாகத்தில் உள்ள நிலக்கடலை ஆய்வு மையத்தில், விவசாயிகள் மற்றும் லட்சாதிபதி மகளிர் திட்டப் பயனாளிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது, ஆய்வு மையத்தின் காத்திருப்பு அறையில் மனைவி சாதனாவை அமர வைத்திருந்தார் சவுகான்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் ராஜ்கோட் செல்லவும், அங்கிருந்து இரவு விமானத்தையும் பிடிக்க வேண்டியிருந்தது. அதனால் அவசர அவசரமாக அவர் புறப்பட்டார். சவுகானின் அவசரத்தை பார்த்து அவருடன் வந்த 22 கார்கள் அடங்கிய கான்வாயும் ராஜ்கோட் நோக்கி சீறி பாய்ந்தன.
வாகனங்கள் விமான நிலையம் நோக்கி வேகமெடுத்து 10 நிமிடங்கள் ஆன நிலையில் தான், மனைவி சாதனாவை காத்திருப்பு அறையில் அமர வைத்துவிட்டு வந்ததை உணர்ந்தார் சவுகான்.
பதறிப் போன அவர், மீண்டும் தன் கான்வாயை திருப்பிக் கொண்டு ஜூனாகத் விரைந்தார். அங்கு மனைவியிடம் நடந்ததை சொல்லி சமாளித்துவிட்டு, ராஜ்கோட்டுக்கு புறப்பட்டார்.