மூணாறுக்கு மீண்டும் வருவேன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
மூணாறுக்கு மீண்டும் வருவேன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
ADDED : ஜன 06, 2024 12:06 AM

மூணாறு:''அழகு நிறைந்த மூணாறுக்கு மீண்டும் வருவேன்,'' என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
கேரளாவில், 760 கோடி ரூபாய் செலவில் ஒன்பது சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல், கொச்சி -- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - போடி மெட்டு ரோடு உட்பட, 704 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்த மூன்று திட்டங்களையும் காசர்கோட்டில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி துவக்கி வைப்பதாக இருந்தது.
அதற்கு, டில்லியில் இருந்து புறப்பட்டபோது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வர முடியவில்லை. அதனால், அத்திட்டங்களை டில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அவர் துவக்கி வைத்தார்.
அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
மூணாறுக்கு, 2017ல் வந்தபோது, அதன் அழகு நினைவில் உள்ளது. அதன் பின்னர் மூணாறுக்கு வர பலமுறை முயன்றும் முடியவில்லை. மூணாறுக்கு மீண்டும் வருவேன். மூணாறு - போடிமெட்டு ரோடு இருவழி சாலையாக அகலப்படுத்தபட்டுள்ளதால் சுற்றுலா வளர்ச்சிக்கு பயனுள்ளதாக அமையும். தமிழகம் செல்ல பயண நேரம் வெகுவாக குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூணாறில் நடத்த நிகழ்ச்சியில் இடுக்கி எம்.பி., டீன் குரியாகோஸ், எம்.எல்.ஏ., ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
மூணாறு - போடிமெட்டு ரோடு அகலப்படுத்தும் பணிகளை மூணாறில், 2017 செப்டம்பரில் அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தார். அப்போது பழநி - சபரிமலை இடையே இரு வழிபாட்டு தலங்களையும் இணைக்கும் வகையில் ரோடு அமைக்கப்படும் என்றார். அத்திட்டம் அறிவிப்புடன் கிடப்பில் போடப்பட்டது.
அதுகுறித்து எதுவும் தெரிவிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.