கட்சிக்குள் குதிரை பேரத்தில் ஈடுபடும் சித்தராமையா, சிவக்குமார் : மத்திய அமைச்சர்
கட்சிக்குள் குதிரை பேரத்தில் ஈடுபடும் சித்தராமையா, சிவக்குமார் : மத்திய அமைச்சர்
ADDED : ஜூலை 13, 2025 09:56 PM

பெங்களூரு: '' கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை திரட்டுவதற்காக சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
கர்நாடகாவின் ஹங்குண்ட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் கூறுகையில், '' காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 55 எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலை பா.ஜ., தயாரித்துள்ளது. கட்சி தாவவில்லை என்றாால் அமலாக்கத்துறை அல்லது சி.பி.ஐ., ரெய்டு வரும் என அவர்களை பா.ஜ.,வினர் மிரட்டுகின்றனர்,'' எனத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலளித்து பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: அமலாக்கத்துறை விசாரணையில் வருவதற்கு விஜயானந்த் ஏதேனும் தவறு செய்துள்ளாரா? தவறு செய்தவர்களுக்கு தான் அமலாக்கத்துறை நோட்டீஸ் வரும். நேர்மையாக இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. பிரச்னைகளை திசை திருப்பவே, 55 எம்.எல்.ஏ.,க்களுக்கு மிரட்டல் என சதி செய்கின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்குள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். சிவக்குமாருக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இல்லை என சமீபத்தில் சித்தராமையா தெரிவித்து இருந்தார். இருவரும் , தங்களுக்கு ஆதரவை திரட்டுவதற்காக பணத்தை பயன்படுத்துகின்றனர். தங்களை வலுப்படுத்திக் கொள்ள எம்.எல்.ஏ.,க்களை வாங்க அவர்கள் தயாராக உள்ளனர். இந்த விவகாரத்தில் பா.ஜ., தலையிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இதுபோன்ற விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம். சித்தராமையாவும், சிவக்குமாரும் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுக்க பணத்தை செலவு செய்ய தயாராக உள்ளனர். காங்கிரஸ் மேலிடம் கட்டுப்படுத்த தவறி விட்டது. இதனால், யாருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அதிகம் உள்ளதோ அவர்கள் முதல்வராக ஆகட்டும் எனக்கூறியுள்ளது. எனவே அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர்.
மக்கள் உத்தரவுக்கு எதிராக பா.ஜ., செயல்படாது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யட்டும். ஆனால், அக்கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் காரணமாக ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய முடியாமல் காங்கிரஸ் உள்ளது. இதனால் பா.ஜ.,மீது குற்றம்சாட்டுகின்றனர். இதில் எந்த அர்த்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

