வளர்ச்சி குறித்து விவாதிக்க வரட்டும் மத்திய அமைச்சர் ஷோபா சவால்
வளர்ச்சி குறித்து விவாதிக்க வரட்டும் மத்திய அமைச்சர் ஷோபா சவால்
ADDED : பிப் 24, 2024 11:01 PM

சிக்கமகளூரு: ''எங்கள் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ, வளர்ச்சி விஷயத்தில் விவாதிக்க நான் தயார்,'' என, மத்திய விவசாயம், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஷோபா சவால் விடுத்தார்.
சிக்கமகளூரு எம்.பி.,யுமான ஷோபா, தன் தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. எனவே இம்முறை அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என, பலரும் பா.ஜ., மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதனால் அவர் எரிச்சலடைந்துள்ளார். எதிர்க்கட்சியினரை விட, சொந்த கட்சியிலேயே இவருக்கு எதிரிகள் அதிகம் உள்ளனர்.
இதுதொடர்பாக, சிக்கமகளூரில் நேற்று அவர் கூறியதாவது:
உண்மையான பா.ஜ., தொண்டர்கள், என் மீது இப்படி குற்றஞ்சாட்டமாட்டார்கள். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
பதவிக்காக எங்கள் கட்சிக்கு வந்தவர்கள், இதுபோன்று குற்றச்சாட்டு சுமத்தக்கூடும்.
அவர்கள் முன்பிருந்த பழக்கத்தை தொடர்கின்றனர். இதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். நான் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் அடிப்படையில், தேர்தலை சந்திக்கிறேன்.
சீட் கேட்க ஜனநாயக நடைமுறையில் அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் மற்றொருவரின் கவுரவத்தை குலைக்கக் கூடாது. நான் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை கூறி, மக்களிடம் சென்று ஆதரவு கேட்பேன்.
சிக்கமகளூரு - உடுப்பி தொகுதிக்கு, எவ்வளவு நிதி கொண்டு வந்தேன் என்பது எனக்கும் தெரியும்.
இதுவரை நான் எந்த ஒப்பந்ததாரரிடமும், ஒரு ரூபாய் பெற்றதில்லை. அவரது முகத்தையும் பார்த்தது இல்லை. நேர்மையான முறையில் பணியாற்றினேன்.
மத்திய அமைச்சர்களுடன் சண்டை போட்டு, நிதியுதவி வாங்கி வந்தேன். எனக்கு எதிரான எந்த சதியும் வேலை செய்யாது. இதற்கு முன்பும் இப்படி செய்தனர். நான் அமைச்சராக நற்பணிகளை செய்துள்ளேன். எங்கள் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ, வளர்ச்சி விஷயத்தில் விவாதிக்க நான் தயார்.
கடந்த 2019, 2020, 2021ல் நிதியுதவி பெற்று வரவில்லை என, என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் அந்த ஆண்டுகளில், மத்திய அரசு எம்.பி.,க்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை. அந்த நிதியை கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தியது.
இவ்வாறு அவர்கூறினார்.