வன்முறையில் ஈடுபட்ட மேலும் இருவரை சுட்டுப் பிடித்த உ.பி., போலீசார்
வன்முறையில் ஈடுபட்ட மேலும் இருவரை சுட்டுப் பிடித்த உ.பி., போலீசார்
ADDED : அக் 02, 2025 12:26 AM
பரேலி: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் கலவரத்தில் வன்முறையை துாண்டிய இருவரை, நேற்று அந்த மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்பூர் மாவட்டத்தில் உள்ள ராவத்பூர் என்ற இடத்தில், கடந்த 4ல் மிலாடி நபியையொட்டி, 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதற்கு ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அடையாளம் தெரியாத 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, பரேலி மாவட்டத்தின் கோட்வாலியில் முஸ்லிம்கள் சமீபத்தில் பேரணி நடத்தினர். மசூதி மற்றும் முஸ்லிம் கல்லுாரியை ஒட்டி, 2,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
'ஐ லவ் முகமது' என எழுதப்பட்ட போஸ்டர்களை தாங்கி ஊர்வலமாகச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்பகுதியில் இருந்த வாகனங்கள், கடைகள் சூறையாடப்பட்டன.
இந்த சம்பவத்தில் போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
இந்த பேரணியை துாண்டி விட்டதாகக் கூறி, உள்ளூர் மத குருவும், இத்தேஹாத்- - இ -- -மில்லத் கவுன்சில் தலைவருமான தவுகீர் ரசா கான் உட்பட 70க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவரின் நெருங்கிய கூட்டாளியான நதீமும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நதீம் அளித்த தகவலின்படி, ஷாஜகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இத்ரீஸ் மற்றும் இக்பால் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். சிபிகஞ்ச் பகுதியில், அவர்கள் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் நேற்று அவர்களை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, போலீசாரை நோக்கி அவர்கள் சுட்டனர். திருப்பிச் சுட்டதில் படுகாயமடைந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கி மற்றும் இரு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட இத்ரீஸ் மற்றும் இக்பால் ஆகியோர் மீது கொலை, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பரேலியின் கோட்வாலியில் நடந்த கலவரத்தில், திட்டமிட்டே வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற, தவுகீர் ரசா கானின் கூட்டாளி நதீம் இவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது, விசாரணையில் தெரிய வந்தது.