உ.பி.யில் கோர சாலை விபத்து! அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி
உ.பி.யில் கோர சாலை விபத்து! அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி
ADDED : ஜன 24, 2025 07:29 AM

லக்னோ; உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ போலீஸ் ஸ்டேஷன் மிக அருகில் நேற்று நள்ளிரவு இரண்டு கார்கள், ஆம்னி வேன் மற்றும் டிரக் ஆகிய வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வாகனங்களில் இருந்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
11க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவில் நடந்த விபத்தை அறிந்த அப்பகுதியினர் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து நிகழ்ந்த இடத்தின் மிக அருகில் போலீஸ் ஸ்டேஷன் இருந்ததால், போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும், கடும் பனி மூட்டமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ பகுதிக்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ள உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.