யுபிஐ சேவை பாதிப்பு: பணம் செலுத்த முடியாமல் படாத பாடுபட்ட பயனர்கள்!
யுபிஐ சேவை பாதிப்பு: பணம் செலுத்த முடியாமல் படாத பாடுபட்ட பயனர்கள்!
ADDED : ஆக 07, 2025 09:42 PM

புதுடில்லி: யுபிஐ சேவையில் இன்று இரவு சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பணம் செலுத்துவதில் பயனர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் தினமும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் முக்கிய பங்காக மாறிவிட்டது. டீக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக ஜிபே, போன்பே, உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) இரவு 7.45 மணியளவில் யுபிஐ(டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றம்) சேவையை இந்த செயலிகளில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பயனர்கள், தங்களது பிரச்னையை 'எக்ஸ் ' சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சிலர் மீம்ஸ்களை வெளியிட்டனர்
இரவு 8.30 மணியளவில், சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன்டெடெக்டரில் 2,147 செயலிழப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த புகார்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் பணம் செலுத்த முயற்சிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட முக்கிய வங்கிகளில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயனர்கள் பணம் செலுத்துவதில் கடும் சிரமம் அடைந்தனர்.