அணுசக்தி ஒத்துழைப்பில் தடையை நீக்க அமெரிக்கா உறுதி
அணுசக்தி ஒத்துழைப்பில் தடையை நீக்க அமெரிக்கா உறுதி
ADDED : ஜன 07, 2025 12:13 AM

புதுடில்லி :''இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, 20 ஆண்டுகளாகியும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்காததால், செயல்பாட்டுக்கு வர முடியவில்லை. இந்த தடைகளை நீக்குவதற்கான முழு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது,'' என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவான் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், 2005 ஜூலையில் கையெழுத்தானது. அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், காங்கிரசைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தியா - அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம், 2008ல் இறுதியானது.
இந்த ஒப்பந்தம், பல கட்டுப்பாடுகளால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதனால், அமெரிக்கா மற்றும் இந்திய நிறுவனங்கள் இடையே அணுசக்தி உற்பத்தி தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுப்பட்டுள்ளது. பல துறைகளில் இணைந்து செயல்படும் கூட்டாளிகள் என்ற நிலைக்கு இரு தரப்பு உறவு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், விரைவில் பதவியில் இருந்து விலக உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உள்ள ஜேக் சல்லிவான், இந்தியா வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை அவர் நேற்று சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, டில்லி ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜேக் சல்லிவான் பேசியதாவது:
அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக, மிக முக்கியமான ஒப்பந்தம் செய்து 20 ஆண்டுகளாகியும், அது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு தடையாக உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்வது தொடர்பான தீவிர முயற்சியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. வெகு விரைவில், இதில் உறுதியான முடிவை அமெரிக்க நிர்வாகம் எடுக்கும் என்பதை அறிவிக்கிறேன்.
இதன் வாயிலாக, அணுசக்தி துறையில், இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியும். கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ள இந்திய நிறுவனங்களின் பெயர்கள் நீக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டன.
விண்வெளித் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான கோப்புகளும், அடுத்த சில நாட்களில் கையெழுத்தாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்ல இவை உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.

