அமெரிக்க துாதரக அலுவலகம் பெங்களூரில் இன்று திறப்பு
அமெரிக்க துாதரக அலுவலகம் பெங்களூரில் இன்று திறப்பு
ADDED : ஜன 17, 2025 07:20 AM

பெங்களூரு: பெங்களூரில் அமெரிக்க துாதரக அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது.
பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, 'எக்ஸ்' வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
பெங்களூரின் விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜெ.டபிள்யூ., மாரியட் ஹோட்டலில், அமெரிக்க துாதரக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்படுகிறது. அமெரிக்க துாதர் எரிக் கர்சிடி உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க துாதரக அலுவலகத்துக்கு, பெங்களூரில் நிரந்தர கட்டடம் கட்டப்படும் வரை, ஹோட்டலிலேயே அலுவலகம் தற்காலிகமாக செயல்படும். மாநில மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளது. இவ்விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய பங்கு வகித்தார்.
பெங்களூரு மக்களுக்கு, குறிப்பாக, ஐ.டி., - பி.டி., ஊழியர்களுக்கு இது உதவியாக இருக்கும். பெங்களூரில் பல்வேறு நாடுகளின் துாதரக அலுவலகங்கள் உள்ளன. ஆனால், அமெரிக்க துாதரக அலுவலகம் இல்லை.
நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியில், பெங்களூரின் பங்களிப்பு 40 சதவீதமாகும். நகர மக்கள் அமெரிக்கா விசா பெற, சென்னை அல்லது ஹைதராபாத் செல்ல வேண்டி இருந்தது. இனி, பெங்களூரிலேயே அமெரிக்க துாதரக அலுவலகம் செயல்படும். இங்கேயே விசா பெறலாம்.