பஞ்சாபில் தரையிறங்கியது அமெரிக்க ராணுவ விமானம்: தாயகம் வந்தனர் 104 இந்தியர்கள்!
பஞ்சாபில் தரையிறங்கியது அமெரிக்க ராணுவ விமானம்: தாயகம் வந்தனர் 104 இந்தியர்கள்!
UPDATED : பிப் 05, 2025 07:51 PM
ADDED : பிப் 05, 2025 01:33 PM

சண்டிகர்: அமெரிக்காவில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை ஏற்றி வந்த ராணுவ விமானம் பஞ்சாபில் இன்று (பிப்.,05) மதியம் தரையிறங்கியது. 104 இந்தியர்கள் தாயகம் வந்து அடைந்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவித்ததுடன், நாடு கடத்தும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டார். அமெரிக்காவில், 18,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்தது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களை இந்தியா திரும்பப் பெறும் என, பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து, இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க நேற்று துவங்கியது. டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்க விமானப் படையின் சி - 17 விமானத்தில், முதற்கட்டமாக, 104 இந்தியர்களை அனுப்பினர்.
இந்நிலையில், இன்று (பிப்.,05) மதியம் பஞ்சாப் அமிர்தசரஸில் அமெரிக்கா ராணுவ விமானம் இன்று (பிப்.,05) மதியம் தரையிறங்கியது.104 இந்தியர்கள் தாயகம் வந்து அடைந்தனர். அவர்களை அவர்களது வீட்டிற்கு பத்திரமாக அனுப்பும் பணி நடந்து வருகிறது.
'அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து உதவிகளையும் செய்தது. எங்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது' என தாயகம் திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.