கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசாதீர்கள்": விஜயேந்திராவுக்கு சித்தராமையா அறிவுரை
கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசாதீர்கள்": விஜயேந்திராவுக்கு சித்தராமையா அறிவுரை
ADDED : நவ 03, 2024 11:36 PM

பெங்களூரு ; 'கண்ணாடி வீட்டில் அமர்ந்து கல் வீசாதீர்கள்' என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, முதல்வர் சித்தராமையா அறிவுரை கூறி உள்ளார்.
முதல்வர் சித்தராமையாவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:
'பிரதமர் நரேந்திர மோடியிடம் வரி பங்கீடு குறித்து விவாதிக்கும் முன்பு, என்னிடம் முதல்வர் சித்தராமையா பகிரங்க விவாதத்திற்கு வரட்டும்' என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா விடுத்துள்ள, சவாலை கவனித்தேன்.
என்னுடன் விவாதம் செய்வதற்கு முன்பு, பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளியுடன், அவர் விவாதம் நடத்தட்டும்.
என் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் தார்மீக உரிமையை, இந்த ஜென்மத்தில் விஜயேந்திரா பெறவில்லை. அடுத்த ஜென்மத்தில் வேண்டும் என்றால் முயற்சி செய்யட்டும்.
புதியவர்
சி.பி.ஐ., அமலாக்கத்துறை அழுத்தத்திற்கு அடிபணியாமல் பாரபட்சமின்றி செயல்பட்டால், எங்கள் மீது அவதுாறு பரப்புகிறீர்கள். கண்ணாடி வீட்டில் அமர்ந்து, கல்வீச நினைக்காதீர்கள்.
எடியூரப்பாவை முதல்வர் ஆக்க கட்சி மேலிடத்திற்கு 2,000 கோடி ரூபாயும், விஜயேந்திராவை தலைவராக்க 1,000 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டதாக, பா.ஜ., தலைவர் ஒருவரே கூறி உள்ளார். கமிஷன் அடிப்பதில் விஜயேந்திரா நிபுணர் என்று, எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி, எம்.எல்.சி., விஸ்வநாத் கூறுகின்றனர். அதற்கு ஏன் இதுவரை பதில் அளிக்கவில்லை.
விஜயேந்திரா அரசியலுக்கு புதியவர். வரி, ஜி.எஸ்.டி., மானியம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
வரி பங்கீட்டில் கர்நாடகாவுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக, நாங்கள் நடத்தும் போராட்டம் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு கர்நாடகாவுக்கு வரி பங்கீடாக 6,498 கோடி ரூபாய் மட்டுமே விடுவித்தது.
மத்திய அரசுக்கு நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் இருந்து, வெறும் 15 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது.
இது கன்னடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது பற்றி பேச விஜயேந்திராவுக்கோ, பா.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் 17 பேருக்கோ தைரியம் இல்லை.
ஆவணம்
காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்று, விஜயேந்திரா கூறும்போது அவருக்கு மனசாட்சி குத்தவில்லையா. போக்சோ வழக்கில் எடியூரப்பா, நீதிமன்றத்தால் தப்பி உள்ளார். அப்படிபட்ட ஒருவரை வீட்டில் வைத்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பில் எங்களுக்கு பாடம் புகட்ட வெட்கமாக இல்லையா.
எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, இப்போதைய உங்கள் கூட்டாளி குமாரசாமி முதல்வராக இருந்த போது, நுாற்றுக்கணக்கான விவசாய குடும்பங்களின் சொத்துகள், வக்பு வாரியத்துக்கு மாற்றப்பட்டன. இதற்கான ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.