திடக்கழிவு மேலாண்மைக்கு பயனர் கட்டணம்...தேவையற்ற சுமை! : முதல்வருக்கு மேயர் கடிதம் எழுதி எதிர்ப்பு
திடக்கழிவு மேலாண்மைக்கு பயனர் கட்டணம்...தேவையற்ற சுமை! : முதல்வருக்கு மேயர் கடிதம் எழுதி எதிர்ப்பு
ADDED : ஏப் 10, 2025 08:43 PM
பகர்கஞ்ச்:திடக்கழிவு மேலாண்மைக்கு பயனர் கட்டணங்களை விதிக்கும் முடிவு, டில்லி மக்களுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும் என்று, மாநகராட்சியின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மேயர் மகேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் மோதல் வெடித்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கு டில்லி மக்களிடம் கட்டணம் வசூலிக்க டில்லி மாநகராட்சி முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் மேயர் மகேஷ் குமார் பேசுகையில், “திடக்கழிவு மேலாண்மைக்காக மக்களிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஆராயும்படி ஆணையருக்கு கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டுள்ளேன். வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் ஏற்கனவே மாநகராட்சி தோல்வி அடைந்துள்ளது என்பதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்,” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் திடக்கழிவு மேலாண்மை பயனர் கட்டணங்களை வசூலிக்கும் திட்டத்தை கைவிடும்படி, நேற்று முதல்வர் ரேகா குப்தாவுக்கு மேயர் மகேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
திடக்கழிவு சேகரிக்கும் திட்டத்திற்காக குடிமக்களிடம் பயனர் கட்டணங்கள் வசூலித்தால் குடிமக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.
வீட்டு வரியுடன் திடக்கழிவுக்கான பயனர் கட்டணங்களை வசூலிக்கும் திட்டம் மாநகராட்சியால் ஒருபோதும் அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்த திட்டம் சபையின் முன் கொண்டு வரப்படவில்லை. மாநகராட்சி ஆணையர் அஸ்வனி குமாரால் திரைக்குப் பின்னால் செயல்படுத்தப்பட்டது. இந்த முடிவு, டில்லி மக்களின் நலன்களுக்கு எதிரானது.
பயனர் கட்டணங்களை விதிக்கும் முன், பொதுமக்களின் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட 12 மண்டலங்களிலும் குப்பை சேகரிப்பு நிறுவனங்களின் பணி திருப்தியற்றதாகவே உள்ளது.
இதன் விளைவாக எல்லா இடங்களிலும் குப்பை குவிந்து கிடக்கிறது. மேற்கு, மத்திய, தெற்கு மண்டலங்களில் தற்போது நிலைமை மோசமாக இருக்கிறது.
வீடுகளில் இருந்து குப்பை தனிப்பட்ட முறையில் சேகரிப்பவர்களுக்கும் மக்களுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. அறுபது முதல் எழுபது சதவீத குப்பை தனியார் மூலம் சேகரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குப்பையை மாநகராட்சி முழுமையாக சேகரிக்கும் திறன் கொண்டதாக மாறும் வரை, இதுபோன்ற பயனர் கட்டணங்களை விதிப்பது பொருத்தமானதாக இருக்காது.
குடிமக்கள் ஏற்கனவே பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரணம் பெற தகுதியான மக்களிடம் கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்த வேண்டாம். முடிவை திரும்பப் பெறுமாறு மாநகராட்சிக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைக்கு பயனர் கட்டணங்களை விதிப்பது தொடர்பாக இந்த விவகாரம், அரசியல் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.
மேயரின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, மாநில அரசின் வட்டாரங்கள் கூறியது:
முந்தைய ஆம் ஆத்மி அரசு, அப்போதைய மூன்று மாநகராட்சிகளுக்கான திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டங்கள் 2017ன் படி, திடக்கழிவு மேலாண்மைக்கு பயனர் கட்டணம் வசூலிப்பது தொடர்பான அறிவிப்பை 2018 ஜனவரி 15ல் வெளியிட்டது.
இது முழுக்க முழுக்க முந்தைய ஆம் ஆத்மி அரசின் திட்டம். அது தான் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேயர், இதை புதிய பா.ஜ., அரசின் திட்டம் போல் சித்திரிக்க முற்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை உச்ச நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்பதை மேயர் மறந்துவிட்டார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

