9 கார்கள், வீடு, கோடிக்கணக்கில் சொத்து...! உ.பி.யை கலக்கும் 'குரோர்பதி' தூய்மைப் பணியாளர்...!
9 கார்கள், வீடு, கோடிக்கணக்கில் சொத்து...! உ.பி.யை கலக்கும் 'குரோர்பதி' தூய்மைப் பணியாளர்...!
ADDED : ஆக 17, 2024 01:32 PM

லக்னோ: உ.பி.யில் 9 கார்கள், ஏகபோக சொத்துகள் என பெரும் வசதியுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவர் தூய்மைப் பணியாளராக இருக்கும் தகவல் வெளி வந்துள்ளது.
தூய்மைப் பணி
இது பற்றி கூறப்படுவதாவது: கோண்டா மாவட்டத்தில் நகர் கோட்வாலி பகுதியில் கமிஷனர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக இருப்பவர் சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால். நாள்தோறும் சக ஊழியர்களுடன் வீதி, விதியாக இறங்கி தூய்மைப் பணியை சிரத்தையாக செய்து வருபவர்.பைல்கள் மாயம்
அவர் பணியாற்றும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகள் அடிக்கடி மாயமாகி விடுவதாகவும், அதில் உள்ள அரசு தகவல்கள் கசிய விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வாறு காணாமல் போகும் பைல்களை சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வால் திருடி அதில் கிடைக்கப் பெறும் வருவாயைக் கொண்டு எண்ணிலடங்கா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் என்றும் கூறப்பட்டது.வசதி
இந் நிலையில், அரசாங்க பைல்களில் உள்ள தகவல்களை திருத்தி ஏராளமான சொத்துகள் குவித்துள்ளார், இது குறித்து விசாரிக்க வேண்டும், அவர் மிகவும் வசதியாக உள்ளார் என்று கமிஷனர் யோகேஸ்வர் ராம் மிஸ்ராவுக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து உரிய விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.9 கார்கள், சொகுசு வீடு
விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு தலைசுற்றாத குறை. புகாருக்கு ஆளான சந்தோஷ்குமார் ஜெய்ஸ்வாலுக்கு இருக்கும் சொத்துகளே காரணம். மொத்தம் அவர் 9 சொகுசு கார்களை வைத்துள்ளார். ஸ்விட் டிசையர், மாருதி எர்டிகா, மகிந்தரா ஸ்கார்ப்பியோ, டொயோட்டா இன்னோவா, மகிந்தரா சைலோ உள்ளிட்ட கார்களும் அடக்கம்.சகோதரர் சொத்து
இதுதவிர, சொகுசான, நவீன வசதிகள் கொண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வீடுகளும் அவருக்கு உள்ளன. இவருக்கு தான் என்றில்லை... அவரது சகோதரர் உமாசங்கர் ஜெய்ஸ்வால், அவரது மனைவி, குழந்தை பெயரில் 3 சொகுசு கார்கள் இருக்கிறது. அனைவர் வைத்துள்ள சொகுசு கார்கள் பற்றிய விவரங்களை அனுப்புமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர். பணப்பரிமாற்றம்
தொடர் விசாரணையில் ஜெய்ஸ்வாலுக்கு ஏராளமான சொத்துகள் இருப்பது உறுதியாக, 5 ஆண்டுகளில் அவரின் வங்கிக் கணக்கில் நடந்த பணப்பரிமாற்றம் பற்றிய விவரங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நடவடிக்கை
உரிய விசாரணைக்கு பின்னரே அவருக்கான சொத்து மதிப்புகள் எவ்வளவு என்பது தெரிய வரும். அனைத்து விசாரணைகளின் முடிவில் ஜெய்ஸ்வால் மீது கட்டாயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

