உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு; கார்கே அறிவிப்பு
உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு; கார்கே அறிவிப்பு
ADDED : டிச 06, 2024 08:56 AM

புதுடில்லி: உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக, அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை விட காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சட்டசபை, இடைத்தேர்தல்களில் ஆளும் பா.ஜ., கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.
இந்நிலையில், இன்று (டிச.,06) உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைப்பதாக, கட்சித் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். இது குறித்து, உ.பி., காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி முழுவதையும் உடனடியாக கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.
2027ம் ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டி அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.