இந்தியாவின் உதவிகளை அண்டை நாடுகள் மதிக்க வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் உதவிகளை அண்டை நாடுகள் மதிக்க வேண்டும்: வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : ஜன 03, 2026 05:15 AM

சென்னை: “இந்தியா, அண்டை நாடுகளின் உறவை மட்டுமே எப்போதும் விரும்புகிறது. அந்நாடுகளுக்கு நாம் செய்யும் உதவியை அவர்கள் மதிக்க வேண்டும். நம் மக்களின் பாதுகாப்புக்காகவும், அமைதிக்காகவும், எதை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம்,” என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி., வெளிநாட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வதற்காக, 'குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. இதை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் மாணவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்:
மேற்கு நாடுகளில், இந்தியா குறித்த தவறான பார்வை உள்ளது. அதை மாற்ற, நாம் தொடர்ந்து தெளிவாகவும், நேர்மையாகவும், அவர்களுடன் உரையாட வேண்டும். உலகில் சில நாடுகளில்தான் பழங்கால நாகரிகங்கள் இருந்தன. அவற்றில் சில நாடுகள், தற்போது இந்தியாவை போல் நவீனமாகி விட்டன. அவர்கள் தங்களின் பாரம்பரியம், மரபு குறித்து பெருமையாக பேசுகின்றனர்.
நாம் பழமையை பேசினாலும், பழமையிலேயே நிற்க கூடாது என்ற எண்ணம் முக்கியம். அப்போதுதான் அவர்கள் நம்மை மதித்து ஏற்பர். இந்த உலகில் எதுவும் தனித்து இல்லை. நாம் மேற்கு நாடுகளை ஒதுக்கவோ வெறுக்கவோ முடியாது. அவர்களின் கூட்டாண்மையும் முக்கியம். அதைத்தான் நம் முன்னோர் 'வசுதைவ குடும்பகம்' என்றனர்.
பொதுவாக, ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் வளர்வதுடன் வெளிநாடுகளிலும் வளர வேண்டும். அண்டை நாடுகளை அரவணைத்து அவர்களுடன் வளர்வதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் ராஜ தந்திரம். நாம், நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்றவற்றுடன் உறவையும், நட்பையும் பேணுகிறோம்.
அந்த நாடுகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் போது, முதல் ஆளாக உதவி செய்கிறோம். அதை அந்த நாடுகளும் மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அந்த அடிப்படையில்தான், நம் அண்டை நாடு ஒன்றுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து குடிநீரை பகிர்ந்து வந்தோம்.
அந்த நாடு, பதிலுக்கு நமக்கு பயங்கரவாதத்தை பகிர்ந்து வந்தது. நல்ல எண்ணமும், விரோத எண்ணமும் சமரசம் செய்துகொள்ள முடியாது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், என்ன செய்யக்கூடாது என்பதையும் நாம்தான் முடிவு செய்ய வேண்டும்; பிறர் செய்ய முடியாது. நம் மக்களின் பாதுகாப்புக்காகவும் அமைதிக்காகவும் எதை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக செய்வோம். இதுதான் நம் நிலைப்பாடு.
நம் நாட்டின் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை, சீனா அபகரித்து அவமதித்தது. இதுபோன்ற அவமானங்களை நம்மால் தாங்க முடியாது. அருணாச்சல பிரதேசம் இந்திய மாநிலம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
கொரோனா தொற்றின்போது, தங்கள் நாட்டின் மக்கள் தொகையை விட இரண்டு, மூன்று மடங்கு தடுப்பு மருந்துகளை வைத்திருந்த வளர்ந்த நாடுகள் கூட மற்ற நாடுகளுக்கு உதவாதபோது, மிகப்பெரிய மக்கள்தொகை உள்ள நாம், பல நாடுகளுக்கு மருந்துகளை இலவசமாகவே அனுப்பி உதவினோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி, கலை, கலாசார பிரிவு ஆலோசகர் சுஷாந்த குமார் பாணிக்ராஹி, மாணவர் பிரிவு டீன் சத்தியநாராயணன் என்.கும்மாடி, சென்னை ஐ.ஐ.டி., குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் நாராயண், இணை பாடத்திட்ட ஆலோசகர் முருகையன் அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

