உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
ADDED : நவ 24, 2025 03:19 PM

தெஹ்ரி; உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தெஹ்ரியில் உள்ள குஞ்சாபுரி-ஹிந்தோலாகல் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள குஞ்சாபுரி கோயிலுக்கு தரிசனம் செய்து விட்டு ஏராளமான பக்தர்கள் பஸ் ஒன்றில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது எதிர்பாராத விதமாக பிரேக்குகள் செயலிழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் உள்ள 70 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உருண்டது.
விபத்தில் பஸ்சில் பயணித்தவர்களில் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று சடலங்களை மீட்டு, படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை அறிந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பதிவில் கூறி உள்ளதாவது;
தெஹ்ரியின் நரேந்திர நகரில் உள்ள குஞ்சாபுரி கோயில் அருகே நிகழ்ந்த பஸ் விபத்து பற்றிய செய்தி மிகவும் வேதனை தருகிறது. இறந்தவர்களின் ஆன்மாக்கள் இறைவனின் நிழலில் இளைப்பாறவும், இந்த துக்கத்தை தாங்கும் வலிமையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தரவும் இறைவனை வேண்டுகிறேன்.
காயமடைந்தவர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். பலத்த காயமடைந்தவர்கள் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்.
இவ்வாறு தமது பதிவில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறி உள்ளார்.

