ரூ.1.4 கோடி கார் ஓட்டி பார்த்த 'வேலட் பார்க்கிங்' ஊழியர் ஓட்டம்
ரூ.1.4 கோடி கார் ஓட்டி பார்த்த 'வேலட் பார்க்கிங்' ஊழியர் ஓட்டம்
UPDATED : ஏப் 05, 2025 01:56 AM
ADDED : ஏப் 05, 2025 01:53 AM

பெங்களூரு : கர்நாடகாவில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றிருந்த பெண்ணின் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை, பார்க்கிங் ஊழியர் ஜாலி ரெய்டு சென்று, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், 'வேலட் பார்க்கிங்' சேவை வழங்குகின்றன. இங்கு வரும் வாடிக்கையாளர்களின் கார் சாவிகளை பெற்று, காரை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதே வேலட் பார்க்கிங்.
'ஜாலி ரெய்டு'
இதற்கு தனியாக ஊழியர்களையும் நியமித்துள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள், தங்கள் காரை பார்க்கிங் செய்ய இடம் தேடி அலைய வேண்டிய தலைவலி இருக்காது.
பெங்களூரின், மாரத்தஹள்ளியில் உள்ள ஹோட்டலில் இத்தகைய வசதி உள்ளது. சில நாட்களுக்கு முன் ஒரு பெண், தன் 1.4 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரில் இந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
வேலட் பார்க்கிங் ஊழியரிடம் கார் சாவியை கொடுத்து விட்டு, உள்ளே சென்றார். உணவை முடித்து கொண்டு வந்த அப்பெண், தன் காரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கற்கள் விழுந்து கார் சேதமடைந்திருந்தது. விலை மதிப்புள்ள காரின் வடிவமே மாறியிருந்தது. இது குறித்து விசாரணையில் தெரியவந்ததாவது:
பார்க்கிங் ஊழியருக்கு இந்த காரை பார்த்ததும், ஒரு ரவுண்ட் போக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
காரை பார்க்கிங் செய்யாமல், 'ஜாலி ரெய்டு' சென்று சுவரில் மோதி, விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் கார் சேதமடைந்துள்ளது. காரை பார்க்கிங் அருகில் விட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
20 லட்சம் ரூபாய்
இது குறித்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் அப்பெண் புகார் கூறியும் நியாயம் கிடைக்கவில்லை. இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் காரை பழுது பார்க்க 20 லட்சம் ரூபாய் செலவாகும் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே தர ஹோட்டல் நிர்வாகம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு விசாரணை யில் தெரிய வந்துள்ளது.