விபத்து ஏற்படுத்திய வேன் 3 மாதத்துக்கு பின் கண்டுபிடிப்பு
விபத்து ஏற்படுத்திய வேன் 3 மாதத்துக்கு பின் கண்டுபிடிப்பு
ADDED : நவ 28, 2024 11:54 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை, மூன்று மாதத்துக்கு பின் போலீசார் கண்டுபிடித்து டிரைவரை கைது செய்தனர்.
கேரள மாநில, பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியை சேர்ந்தவர் விஷ்ணு, 28. இவர், கடந்த ஆக., 21ம் தேதி நள்ளிரவு, 1:50 மணியளவில் பட்டாம்பியில் இருந்து, பாலக்காடு நோக்கி பைக்கில் சென்றார். அப்போது, கல்லேக்காடு என்ற இடத்தில், எதிரில் வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
விபத்தில், படுகாயமடைந்த விஷ்ணுவை அப்பகுதி மக்கள் மீட்டு, திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., ஆனந்த் அறிவுரையின்படி, பாலக்காடு டவுன் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விபின் வேணுகோபாலின் தலைமையில்சிறப்புப்படை அமைத்து, விபந்து நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரணையில் ஈடுபட்டனர்.
அதில், விபத்து ஏற்படுத்திய வாகனம், கர்நாடகா பதிவு எண் கொண்ட சரக்கு வேன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கர்நாடகா சென்று, பெங்களூரு தேவநெல்லி விஜயபுரம்பகுதியைச் சேர்ந்த டிரைவர் பிரசன்னா குமார், 53, என்பவரை, நேற்று கைது செய்தனர்.