வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி...! தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி...! தண்டவாளத்தில் காத்திருந்த அதிர்ச்சி!
ADDED : ஆக 27, 2024 10:45 AM

ஜெய்பூர்: ஜோத்பூர் அருகே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத் நகரத்தில் இருந்து ஜோத்பூருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 375 பயணிகளுடன் புறப்பட்டது. அதி வேகத்தில் ரயில் சென்று கொண்டிருந்த போது ஜவாய் பண்ட் மற்றும் பைரோலியா ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பகுதியில் டமால் என்ற சத்தத்துடன் ஏதோ ஒரு பொருள் மீது மோதியது.
சத்தம் கேட்டு குழப்பம் அடைந்த ஓட்டுநர்கள் இது குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ரயில் என்ஜின் முன்பகுதியில் சேதம் அடைந்ததாகவும் கூறி உள்ளனர். இதனால் 7 நிமிடங்கள் தாமதமாக ரயில் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட ரயில்வே தண்டவாள பகுதியில் ரயில்வே ஊழியர்கள் சோதனையில் இறங்கிய போது, அங்கு உடைந்த சிமென்ட் பலகை இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.
திட்டமிட்டே, ரயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் உணர்ந்து. இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர் மற்றும் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக அனைத்தையும் ஆய்வு செய்த உயரதிகாரிகள், தண்டவாளத்தை கவிழ்க்க சதி நடந்திருப்பதை உறுதி செய்து, மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர். மிகப்பெரும் சதி வேலைக்கு திட்டமிட்டு தண்டவாளத்தில் சிமெண்ட் பலகை வைக்கப்பட்டு உள்ளதால் மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.