ADDED : பிப் 01, 2024 11:04 PM

கல்யாண் கர்நாடகாவில் மூன்று கருவறைகள் கொண்ட வீரபத்ரேஸ்வரர் கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பீதர் மாவட்டம், ஹூம்னாபாத்தில் அமைந்துள்ள வீரபத்ரேஸ்வரர் கோவில். கல்யாண் கர்நாடகாவில் உள்ள முக்கியமான புண்ணிய தலங்களில் இக்கோவிலும் ஒன்று.
வீரபத்ரேஸ்வரரை தரிசிக்க தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர். இக்கோவில், 'ஜெயசிம்மபுரா' என்று பழங்கால பெயருடனும் அழைக்கப்படுகிறது.
இக்கோவிலை ராஜா ராமச்சந்திர ஜாதவ், 1725ல் கட்டினார் என்று கூறப்படுகிறது. கோவிலின் கருவறை அமைப்பு, இந்திய கட்டட கலையின் பழைய பாணியில் உள்ளது.
மூன்று கருவறைகளை கொண்டுள்ளது. வீரபத்ரேஸ்வரர் கருவறைக்கு இடதுபுறம் வீரபத்ர காளியும், வலதுபுறம் ஜெயசங்கரரும் உள்ளனர். கருவறைக்கு முன் 16 துாண்கள் கொண்ட மண்டபம், இடையில் நந்தி சிலை அமைந்து உள்ளது.
கோவிலில் ஒரு கோபுரம் மட்டுமே உள்ளது. இக்கோவிலில் முக்கியமானது. கோபுரத்தை சுற்றிலும் பல புராண காட்சிகள் சிலை வடிவில் செதுக்கப்பட்டு உள்ளன. கோபுரத்தில் உச்சியில் கலசம் உள்ளது.
அத்துடன், நகரும் துாணும் அமைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, 50 அடி உயரத்தில் இரண்டு விளக்கு துாண்கள் அமைந்துள்ளது.
கோவிலின் பிரதான வாசல் கிழக்கு நோக்கி உள்ளது. எதிரில் கருவறையில் வீரபத்ரேஸ்வரர் சிலையை பக்தர்கள், வெகு தொலைவில் இருந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கோவிலில் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் ஏழு நாட்களுக்கு ஆண்டு விழா நடக்கும்.
வீரபத்ரேஸ்வரரை தரிசிக்க, மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நமது நிருபர் -

