சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட்டுக்கும் 'சைவம், அசைவம்' குறியீடு
சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட்டுக்கும் 'சைவம், அசைவம்' குறியீடு
ADDED : செப் 23, 2026 04:56 AM

புதுடில்லி: சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களில் சைவம், அசைவம் குறியீடு பதிக்கும் வகையில், 'பேக்கேஜிங்' விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
உணவுப் பொருட்களின் பாக்கெட்களில் சைவம் என்றால் பச்சை நிறமும், அசைவம் என்றால் சிவப்பு நிறமும் குறியீடாக அச்சடிக்கப்பட்டிருக்கும். தற்போது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களிலும் இந்த விதியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்ட அளவியல் (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011ல் திருத்தம் செய்யப்பட்டு, உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சோப்பு, ஷாம்பூ, டூத்பேஸ்ட் போன்ற பொருட்கள் முழு சைவம் என்றால் அதில் பச்சை நிற புள்ளியை குறியீடாகவும், விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டால், அசைவம் என்பதை குறிக்க அதில் சிவப்பு அல்லது பழுப்பு நிற புள்ளியை குறியீடாகவும் அச்சிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், அழகு சாதனப் பொருட்களை வாங்கும் நுகர்வோர் தங்களுக்கு உகந்த பொருட்களை எளிதாக கண்டறிந்து வாங்க முடியும். இந்த நிற குறியீட்டை பொருள் பேக் செய்யப்பட்டிருக்கும் அட்டையின் மேல்புறத்தில் நுகர்வோர் கண்ணில் தெரியும்படி அச்சிட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
