குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., மட்டும் கொண்ட திட்டம் கட்டாயம்! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 'டிராய்' உத்தரவு
குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., மட்டும் கொண்ட திட்டம் கட்டாயம்! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 'டிராய்' உத்தரவு
ADDED : செப் 23, 2026 05:07 AM

புதுடில்லி: 'குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும் குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மட்டும் அடங்கிய திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும்' என, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு, 'டிராய்' எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
'ஸ்மார்ட் போன்' அல்லாத சாதாரண மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையதள சேவையுடன் கூடிய, 'ரீசார்ஜ்' திட்டங்களை மட்டுமே வழங்கி வருகின்றன. இதனால், ஸ்மார்ட் போன் அல்லாத சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதிகளவிலான தொகையில் ரீசார்ஜ் செய்யும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
ஏற்பாடு
இந்நிலையில், தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13வது திருத்தம்) ஒழுங்குமுறை, 2026ன் விதிமுறைகளின்படி டிராய் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணையதள சேவை இல்லாத வெறும் குரல் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்., மட்டுமே கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.
குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதள சேவைகளுடன் வழங்கப்படும் 30 நாட்கள் மற்றும் அதற்கு குறைவான கால அளவு கொண்ட திட்டங்களுக்கு இணையாக, இந்த திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் இந்த திட்டம் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அந்த தேதி இல்லையெனில், அம் மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்தல் நடக்கும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மலிவு விலை
'டேட்டா' எனப்படும் இணையதள வசதி நீக்கப்படுவதால், இந்த புதிய குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., கட்டண திட்டம், டேட்டாவுடன் கூடிய வழக்கமான திட்டங்களை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவும், மலிவாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டிராய் அதிகாரிகள் கூறுகையில், 'இந்த புதிய கட்டண கட்டமைப்பு நுகர்வோரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும். இணையதள சேவை தேவையற்றவர்களும், ஸ்மார்ட் போன் அல்லாத சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்களும், இதனால் அதிகளவில் பயனடைவர்' என, தெரிவித்தனர்.
