டில்லி - டேராடூன் சாலையில் வாகனங்களுக்கு தடை 18ம் தேதி அமலாகிறது
டில்லி - டேராடூன் சாலையில் வாகனங்களுக்கு தடை 18ம் தேதி அமலாகிறது
ADDED : ஜூலை 08, 2025 10:08 PM

முசாபர்நகர்:கன்வார் யாத்திரையை முன்னிட்டு, 11ம் தேதி முதல் டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கங்கா கால்வாய் சாலையில் கனரக வாகனங்களும், 18ம் தேதி முதல் அனைத்து மோட்டார் வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
டில்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேம் ஆகிய மாநிலங்களில் இருந்து, சிவபக்தர்கள் ஆண்டு தோறும் நடக்கும் கன்வார் யாத்திரையின் போது, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், கோமுகி மற்றும் கங்கோத்ரி ஆகிய தலங்களில், கங்கை நதியில் இருந்து புனிதநீரை எடுத்துச் சென்று, தங்கள் ஊர் சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர்.
5 கோடி
இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை வரும், 11ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த யாத்திரையை முன்னிட்டு மாநில அரசுகள் கன்வார் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், உ.பி., மாநிலம் முசாபர் நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சஞ்சய் குமார் கூறியதாவது:
கன்வார் யாத்திர துவங்கும், 11ம் தேதி முதல் டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கங்கா கால்வாய் சாலை ஆகியவற்றில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 18ம் தேதி முதல் அனைத்து வகையான வாகனங்களும் இந்தச் சாலைகளில் அனுமதிக்கப்படாது.
இந்த ஆண்டு யாத்திரையில், ஐந்து கோடி சிவ பக்தர்கள் பங்கேற்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கன்வார் யாத்திரை சிறப்பாக நடக்க, உ.பி., மாநிலம் 18 மண்டலங்களாகவும், 88 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் செல்லும் பாதையில், 1,543 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிறப்பு பஸ்
அதேபோல, கன்வார் யாத்ரீகர்கள் தங்கும் முகாம்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கன்வார் யாத்திரைக்காக, 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக சஹாரன்பூர், முசாபர் நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் உள்ள கங்கை, யமுனை மற்றும் கங்கா கால்வாய் ஆகியவற்றின் குளியல் இடங்களில் போலீஸ் டைவர்ஸ் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முசாபர் நகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் சுனில் தியோடியா, “கன்வார் யாத்திரையை முன்னிட்டு மாவட்டம் முழுதும், 43 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
''யாத்திரை பாதைகளில் அத்தியாவசிய மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கன்வார் யாத்ரீகர்களுக்காக, 100 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன,” என்றார்.

